தனது சொந்த காரணங்களுக்காக இந்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய ஹசில்வுட்டிற்கு பதிலாக, ஆஸ்திரேலிய அணியின் ஜேசன் பெஹண்ட்ரூஃபை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் இன்று (9-04-21) துவங்குகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.
அதே போல் நாளை மாலை நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
தனது சொந்த காரணங்களுக்கு இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய ஹசில்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரரை கண்டறிவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வழியாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரை இன்று தனது அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தன்னால் இரண்டு மாத காலத்திற்கு பயோ பபுளிற்குள்ளே இருக்க முடியாது அது தனக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்துவிடும் என கூறிய ஹசில்வுட், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என கருதப்பட்ட ஹசில்வுட் திடீரென விலகியதால், அவருக்கு பதிலான மாற்று வீரரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இங்கிலாந்து அணியில் ரிச்சி டாப்லே, ஆஸ்திரேலிய அணியின் பில்லி ஸ்டான்லேகே போன்ற வீரர்களை சென்னை அணி அனுகிய போதிலும், இந்தியாவில் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா பரவலை காரணம் காட்டி இருவரும் சென்னை அணியின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஹசில்வுட்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹண்ட்ரூஃபை ஒப்பந்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை அணியில் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜேசன் பெஹண்ட்ரூஃபிற்கு இது இரண்டாவது ஐபிஎல் தொடராகும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடிய பெஹண்ட்ரூஃப் அதில் பல விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.