சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
கடந்த 9ம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரில் இதுவரை 21 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இன்றைய போட்டியில் (27-4-21) பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
அதே போல் நாளை மாலை (28-4-21) நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே போல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து போட்டியில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்ப ஹைதராபாத் அணி கடுமையாக போராடும் என்பதால், இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடாத மொய்ன் அலி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரீ எண்ட்ரீ கொடுப்பார் என தெரிகிறது. மொய்ன் அலிக்கு அணியில் இடம் கிடைத்தால், டூவைன் பிராவோ மீண்டும் தனது இடத்தை இழக்க நேரிடும் என தெரிகிறது. அதே வேளையில் கடந்த போட்டியில் விளையாடாத லுங்கி நிகிடிக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு இருக்காது என்றே தெரிகிறது, அவருக்கு பதிலாக கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் இம்ரான் தாஹிரே விளையாடுவார் என தெரிகிறது.
இது தவிர அணியில் வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. பேட்ஸ்மேன்கள் வரிசையில் வழக்கம் போல் ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பத்தி ராயூடு ஆகியோரும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என தெரிகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வா, டூபிளசிஸ், மொய்ன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.