பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
14வது ஐபிஎல் டி.20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் தொடரின் நான்காவது போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளுக்குமே இந்த போட்டி இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை துவங்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் அணி கழட்டிவிட்டதால் இந்த தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்த உள்ளது நாம் அறிந்ததே.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸும், யசஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்குவார்கள் என தெரிகிறது. கடந்த தொடரில் அவ்வளவாக சிறப்பாக விளையாடாத பென் ஸ்டோக்ஸும், ஜெய்ஸ்வாலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.
அதே போல் மிடில் ஆர்டரில் வழக்கம் போல் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர் மற்றும் ரியான் ப்ராக் ஆகியோரே களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் சிவம் துபே, ராகுல் திவாடியா மற்றும் கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட கிரிஸ் மோரிஸ் ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆண்ட்ரியூ டை, கார்திக் தியாகி மற்றும் ஸ்ரேயஸ் கோபால் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் இடத்தை ஆண்ட்ரியூ டையால் சரி செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
பென் ஸ்டோக்ஸ், யஸ்வஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், ரியான் ப்ராக், ராகுல் திவாடியா, சிவம் துபே, கிரிஸ் மோரிஸ், ஆண்ட்ரியூ டை, கார்த்திக் தியாகி, ஸ்ரேயஸ் கோபால்.