ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்காதது ஏன்..? வித்தியாசமான விளக்கம் கொடுத்த ஸ்டீபன் பிளமிங் !!

சென்னை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இளம் வீரர்களில் முதன்மையானவரான ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு இதுவரை சென்னை அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பே கொடுக்காததற்கான காரணத்தை சென்னை அணியின் பயிற்சியாளரான பிளமிங் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடருக்கான ஏலத்தின் போது வழக்கத்திற்கு மாறாக இளம் வீரர்கள் பலரை ஏலத்தில் எடுத்தது.

ஜெகதீஷன், மகேஷ் தீக்‌ஷன்னா, ஆடம் மில்னே, ராஜவர்தன் ஹங்ரேக்கர், துசார் தேஸ்பாண்டே, முகேஷ் சவுத்ரி என பல இளம் வீரர்களை சென்னை அணி நல்ல விலைக்கு ஏலத்தில் எடுத்தது. சென்னை அணியில் எடுக்கப்பட்ட மற்ற அனைத்து வீரர்களையும் விட ராஜவர்தன் ஹங்ரேக்கர் மீதே அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வந்த ராஜவர்தன் ஹங்ரேக்கர் சென்னை அணியில் தீபக் சாஹரை போன்று முக்கிய வீரர்களில் ஒருவராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியோ இதுவரை ஒரு போட்டியில் கூட அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை.

தீபக் சாஹருக்கு பதிலாக அவரது இடத்தில் களமிறக்கப்பட்ட துசார் தேஸ்பாண்டே, முகேஷ் சவுத்ரி போன்ற வீரர்கள் தொடரின் ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கியதே, சென்னை அணியின் சில தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. இதனால் விரைவில் ஹங்கரேக்கரும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடிவிட்டது ஆனால் தற்போது வரை அவருக்கான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

திறமையான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் சென்னை அணி வீணடித்து வருவதாக கடும் விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஹங்ரேக்கருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை ஸ்டீபன் பிளமிங் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஸ்டீபன் பிளமிங் பேசுகையில், “ராஜவர்தன் ஹங்ரேக்கர் திறமையான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும், அவரை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் மிக கவனமாக உள்ளோம். சம்பந்தமே இல்லாமல் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவரது திறமையை வீணடிக்க விரும்பவில்லை. அவருக்கான நேரம் வரும் பொழுது நிச்சயம் அவருக்கு இடம் கொடுக்கப்படும். இந்த தொடரிலேயே ஹங்ரேக்கர் விளையாடுவதற்கான தேவை ஏற்பட்டால் நிச்சயம் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.