அசால்டாக 8 சிக்ஸர்கள் பறக்கவிட்ட ரசல்; பஞ்சாப்பை பந்தாடி அபார வெற்றி பெற்றது கொல்கத்தா !!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 8வது போட்டியான இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள், கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்ததால் வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராஜபக்சே 31 ரன்களும், ரபாடா 25 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் கொல்கத்தா அணியில் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், டிம் சவுதி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் (3), ரஹானே (12), ஸ்ரேயஸ் ஐயர் (26) மற்றும் நிதிஷ் ராணா (0) போன்ற சீனியர் வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், 5வது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ரசல் – சாம் பில்லிங்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியை சரிவில் இருந்து மீட்டது.

சாம் பில்லிங்ஸை பொறுமையாக விளையாடவிட்டு, மறுமுனையில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்த ரசல் 31 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், 14.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.