கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் முதல் ஐந்து போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி மேத மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தற்பொழுதே ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் ஐந்து போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளரான டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டேவிட் ஹசி பேசுகையில், “ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் தொடரை விட தங்களது நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம். நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுப்பதே ஒரு சிறந்த வீரருக்கான பண்பு. பாட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளதால், அவர்கள் இருவரும் முதல் ஐந்து போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் முழு உடற்தகுதியோடு இருப்பதால் இந்தியா வந்தவுடன் உடனடியாக கொல்கத்தா அணியில் இணைந்துவிடுவார்கள் என நம்புகிறேன். பாட் கம்மின்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் விலகுவது பின்னடைவு தான் என்றாலும், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன் போன்ற சிறந்த வீரர்கள் எங்களுடன் இருப்பதால் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.