புதிய கேப்டன் இவர் தான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !!

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. 15வது சீசனான இந்த வருட தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் வைத்து நடத்தப்பட்டது.

மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து கொண்டன. இதில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் ஸ்ரேயஸ் ஐயரும் ஒருவர்.

கடந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஸ்ரேயஸ் ஐயர், டெல்லி அணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு மெகா ஏலத்தில் பங்கேற்றார். ஸ்ரேயஸ் ஐயரை மிக கடுமையான போட்டிக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

கடந்த தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்திய இயன் மோர்கன், அந்த அணியை இறுதி போட்டி வரை அழைத்து வந்தாலும், இயன் மோர்கன் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை தக்க வைத்து கொள்ளாமல் அணியில் இருந்து விடுவித்தது.

மெகா ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்த அடுத்த நொடியே இவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த கேப்டன் என அனைவரும் கணித்திருந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே இன்று வெளியிட்டுள்ளது.

இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, கங்குலி, கவுதம் கம்பீர், மெக்கல்லம், தினேஷ் கார்த்திக் மற்றும் இயன் மோர்கன் ஆகிய ஐந்து வீரர்கள் இதற்கு முன் வழிநடத்தியுள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரேயஸ் ஐயர் தற்போது 6வது வீரராக இணைந்துள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர் கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஸ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, ரிஷப் பண்ட்டும் தொடர்ந்து சிறப்பாக டெல்லி அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.