எந்த அணி என்னை நம்பி எடுக்கிறதோ, அவர்களுக்காக என் முழு திறமையையும் வெளிப்படுத்தி செயல்படுவேன் என்று யுசுவேந்திர சஹல் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சஹல், கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டார். கடந்த சீசன் வரை அந்த அணிக்கு முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஆகவும் திகழ்ந்திருக்கிறார்.
பெங்களூரு அணியில் அபாரமாக செயல்பட்டதால் 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த அளவிற்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்த இவரை பெங்களூரு அணி வரும் ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு முன்பாக தக்க வைக்கவல்லை. முன்னணி லெக் ஸ்பின்னராக இருக்கும் இவரை எடுப்பதற்கு பல அணிகள் போட்டி போடுகின்றன. இதுகுறித்து சஹலிடம் கேட்டபோது,
“2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு ‘ரைட் டு மேட்ச்’ வாய்ப்பு இருந்தது. அதைக் கொண்டு என்னை தக்க வைத்தது. இம்முறை அப்படி ஒரு வாய்ப்பு இல்லை. மீண்டும் ஒரு முறை பெங்களூர் அணிக்கு சென்றால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் உணர்வேன். ஏனெனில் எட்டு ஆண்டுகள் அந்த அணியுடன் பயணித்திருக்கிறேன். அப்படி அமையவில்லை என்றால் எந்த அணி என்னை நம்பி எடுக்கிறதோ, அதற்காக எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவன்.
நான் ஒரு தொழில்முறை பந்துவீச்சாளர், ஆகையால் என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அணிக்கு எந்த வகையிலும் குறைகள் இருக்காத அளவிற்கு செயல்படுவோம். ஒரு சிறுவனாக பெங்களூரு அணிக்கு வந்து தற்போது இந்திய அணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு பெங்களூர் அணி நிர்வாகம் கொடுத்த முழு ஆதரவு முக்கிய காரணம். மீண்டும் அணிக்கு செல்வதையே நான் பெரும்பாலும் விரும்புகிறேன்.
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி. துரதிஷடவசமாக இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. விரைவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியுடனான தொடர் இருக்கிறது. அதில் முழுப் பங்களிப்பை கொடுப்பேன்.” என்றார்.