கேமரூன் கிரீன் ஐபிஎல்ல ஆடட்டும்.. ஆனா ஒரு கண்டிஷன்; மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு செக் வைத்த ஆஸி., கிரிக்கெட் வாரியம்

கேமரூன் கிரீன் ஐபிஎல் போட்டிகளில் ஆடும்பொழுது நாங்கள் இதை செய்வோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிபந்தனைகள் விதித்திருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

நடந்து முடிந்த மினி ஐபிஎல் ஏலத்தில் 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டவர் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன். இதற்கு முன்னர் 15.5 கோடிக்கு எடுக்கப்பட்ட இஷான் கிஷன் இருந்தார்.

தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் போது, பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் விரலில் காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறினார். பிறகு முதலுதவி செய்து கொண்டு மீண்டும் பேட்டிங் செய்து 51 ரன்கள் அடித்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக அவரது விரலை பரிசோதித்த மருத்துவர்கள், அவரால் அடுத்த நான்கு வாரங்களுக்கும் பந்துவீச இயலாது. மேலும் கூடுதல் நான்கு வாரங்கள் நிபந்தனைகளுடன் கூடிய பந்துவீச்சிலேயே ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ள ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் தொடரிலும் கிரீன் இருக்கிறார். ஆனால் அதிலும் அவரால் பந்துவீச முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின் போது தான் அவரால் இனி பவுலிங் செய்ய முடியும் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கூறியுள்ளது.

ஐபிஎல் தொடரின்போதும் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலியா அணியின் கண்காணிப்பிலேயே இருப்பார். அப்போது அவரின் காயம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை பொறுத்துதான் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருப்பாரா? மாட்டாரா? என்பதை கூற இயலும் என்ற நிபந்தனைகளும் விதித்திருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் முடிந்தவுடன் உலகக்கோப்பை தொடர் மற்றும் ஆஷஷ் தொடர்கள் இருப்பதால் இத்தகைய முடிவை ஆஸி., வாரியம் எடுத்துள்ளது.

இது குறித்து பிசிசிஐக்கு வந்துள்ள செய்தியை அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது. அதில், “கேமரூன் கிரீன் விரலில் எலும்பும் முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் அது குணமடைவதற்கு குறைந்தது நான்கு வாரங்கள் ஆகும். அதைத்தொடர்ந்து மேலும் நான்கு வாரங்களுக்கு அவர் பந்துவீசக்கூடாது. நேரடியாக ஐபிஎல் தொடர் துவங்கும் பொழுது தான் அவர் விளையாடுவார்  அப்போதும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.

அணிக்கு முக்கியமான வீரர் என்பதால், அவரது உடல்நிலை எங்களுக்கு முக்கியமானது. அடுத்தடுத்த ஆஸி., தொடருக்கு அவரது பங்களிப்பு அவசியம். இவை அனைத்திற்கும் பிசிசிஐ ஒப்புக்கொண்டால் மட்டுமே ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் தொடர்வார்.” என பிசிசிஐ-க்கு செய்திகள் வந்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக மாற்றுவீரர் எவரேனும் கிடைப்பாரா? என்பதையும் மும்பை அணி நிர்வாகம் தீவிரமாக தேடி வருகிறது. எந்நேரமும் கேமரூன் கிரீன் விளையாட மாட்டார் என்ற தகவல்களும் வரலாம் என்றும் தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.