தோனியின் காலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் அடித்தது. 176 ரன்கள் எனும் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு துவக்கம் கிடைக்கவில்லை. மிடில் ஓவர்களிலும் போதிய ரன்கள் வரவில்லை.
இந்நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்கள் தேவை ஏற்பட்டது. அப்போது தோனி மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட வெற்றியின் நுழைவு வாயிலுக்கு சிஎஸ்கே அணியை அழைத்துச் சென்றனர். இறுதியாக, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் சிஎஸ்கே அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில், கீப்பிங்-இல் ஈடுபட்டிருந்த தோனி கடைசி ஐந்து ஓவர்கள் இருந்தபோது காலில் பிரச்சனை ஏற்பட்டு பிசியோவை உள்ளே அழைத்து சிகிச்சை பெற்றுக்கொண்ட பிறகு மீண்டும் கீப்பிங்கை செய்தார். அதே பிரச்சனையுடன் பேட்டிங்கில் இறங்கி பினிஷிங் ரோலில் மிரள வைத்தார்.
போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த சிஎஸ்கே அணியின் தலைமை கோச் ஸ்டீபன் பிளெம்மிங், தோனி உடல்நிலை குறித்தும், அவரது காலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சிகரமாக இருந்தது. அவர் கூறியதாவது:
“தோனியின் காலில் பிரச்சனை இருக்கிறது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அதன் நீட்சியாகவே போட்டியின் நடுவே பிசியோ சிகிச்சை கொடுத்தார். இருப்பினும் தோனிக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அவர் நான்கு உணர்வார். அதற்கேற்றவாறு கால் அசைவுகள் மற்றும் பேட்டிங் அணுகுமுறைகள் இருக்கின்றது.
தோனி தலைசிறந்த வீரர் மட்டுமல்லாது, சிறந்த உடல்தகுதியையும் கொண்டவர். அந்த வகையில் அவருக்கு சிகிச்சை கொடுப்பது எளிது. மேலும் அவர் விரைவாகவும் குணமடைந்து வருகிறார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இருப்பாரா என்பதை என்னால் இப்போது எதுவும் கூற முடியாது. அணியின் மருத்துவர்கள் உரிய சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அடுத்த போட்டிக்கு முன்பு அந்த முடிவுகளை தோனி பார்த்துக் கொள்வார்.” என்று பேசினார்.