டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு டேவிட் வார்னரிடம் பேச்சு வார்த்தை ; புதிய தகவலை வெளியிட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி..
ரிஷப் பண்டின் பொறுப்பை இரண்டு வீரர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு டெல்லி அணி திட்டமிட்டிருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், உயிர் சேதத்திலிருந்து தப்பித்தாலும் உடல் முழுவதும் கடுமையான காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
ஆழமான வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் என அனைத்தும் சில வாரங்களில் குணமடைந்தாலும் அவருக்கு முட்டியில் கிழிந்திருக்கும் ஜவ்வு பிரச்சனை சரியாவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், பார்டர் கவாஸ்கர் டிராபி, 2023 ஐபிஎல் தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்,மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் என எதிலும் பங்கு பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2023 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தன்னுடைய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
கேப்டனாக டெல்லி அணி, ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை நியமிக்கும் என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வந்தாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக யாரை டெல்லி அணி நியமிக்கப் போகிறது என்ற சந்தேகம் எழுந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர், கேப்டனாக டேவிட் வார்னரையும் மற்றும் விக்கெட் கீப்பராக சர்பிராஸ் அகமதையும் நியமிப்பதற்கு டெல்லி அணி திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த நிர்வாகி தெரிவித்ததாவது, “ரிஷப் பண்ட் மிடிலாளர்களில் அசத்தக்கூடிய ஒரு வீரர், அவர் இல்லாமல் டெல்லி அணி தடுமாறும், இருந்தாலும் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில், அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் டெல்லி கேப்பிடல் அணியை அவர் வழி நடத்திக் கொள்வார். இது சம்பந்தமாக நிர்வாகம் அவரிடம் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலம் வாய்ந்ததாகவும் மற்றும் இந்திய வீரர்களை கொண்டும் இருக்க வேண்டும், என்பதால் டெல்லி அணி சர்பிராஸ் அகமதை நாடவுள்ளது, மேலும் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாகவும் அவரை நியமிக்க உள்ளதாக டெல்லி அணி திட்டமிடப்பட்டுள்ளது”, என்று அந்த நிர்வாகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.