ஹர்திக் பாண்டியா ஒன்று பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டால், பௌலிங் சரியாக செயல்படுவதில்லை. இல்லையெனில் பவுலிங் நன்றாக செயல்பட்டால் பேட்டிங் சரியாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இவர் முறையான ஆல்ரவுண்டரா? என கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஹார்திக் பாண்டியாவிற்கு நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடர் ஆல்ரவுண்டராக சரியாக அமையவில்லை. கடந்த 2022 ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டார். மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பெற்றார். தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் உயர்ந்துள்ளார்.
2023 ஐபிஎல்-இல் பேட்டிங்கில் மொத்தம் 14 இன்னிங்ஸ் விளையாடி இரண்டு அரைசதங்கள் உட்பட 346 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். பவுலிங்கில் மொத்தம் 25 ஓவர்கள் மட்டுமே வீசி அதில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஆல்ரவுண்டர் இடத்திலும் விளையாடி வருகிறார். அவரைப்போன்ற வீரர் இப்படி மோசமாக செயல்பட்டு வருவது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல. அவரிடம் என்ன பிரச்சனை இருக்கிறது? என்கிறவாறு தனது சமீபத்திய பேட்டியில் விமர்சனத்துடன் பேசியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
“சமீபகாலமாக ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் சற்று மோசமாகவே இருந்து வருகிறது. இதை பெரிதளவில் யாரும் கண்டு கொள்ளவில்லையே ஏன்?. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பாண்டியா சிறிதுநேரம் பேட்டிங் செய்திருந்தால், பைனலில் அவரது பேட்டிங் நன்றாக இருந்திருக்கும். ஃபார்ம் தொடர்ந்திருக்கும். ஆனால் திட்டமிடுகிறேன் என்கிற பெயரில் தனது ஃபார்மை இழந்துவிட்டார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பவுலிங்கில் நன்றாக செயல்பட்டார். அதேபோல் பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட்டார். ஆனால் இந்த வருடம் இரண்டும் சரியாக எடுபடவில்லை. பவுலிங் நன்றாக செய்தால் மட்டுமே, பேட்டிங்கில் சரியாக செயல்படுவரோ? பேட்டிங், பௌலிங் இரண்டிலும் ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பை கொடுத்தால் தான் அணியின் வெற்றிக்கு உதவும்.
ஒரு போட்டியில் இரண்டிலும் நன்றாக செயல்படுவார். மற்றொரு போட்டியில் எந்த வகையிலும் பங்களிப்பை கொடுக்க மாட்டார். இப்படி இருந்தால் இவரை நம்பி எப்படி அணி செயல்படும்?. கேப்டனாக இருக்கும் ஒருவர் இப்படி பொறுப்பில்லாமல், அனுபவம் இல்லாதது போல செயல்படலாமா?.” என மஞ்ச்ரேக்கர் சாடினார்.