ஐபிஎல் தொடர் முடிவுற்றவுடன் ஆஷஸ் தொடர் வரவுள்ளதால், அதற்காக நல்ல உடல்நிலையை வைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ளார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் இந்திய வீரர்களும் விரைவில் ஐபிஎல் அணிகளுடன் இணைவதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. மேலும் இந்த வருடம் பழைய முறைப்படி, ஒரு போட்டி உள்ளூர் மைதானத்திலும் இன்னொரு போட்டி வெளி மைதானத்திலும் நடக்கிறது.
ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த வருடம் ஐபில்-இல் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை. சிலர் கலந்து கொண்டு பாதியிலேயே நாடு திரும்புகின்றனர்.
டிசம்பர் மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் கடைசி சில போட்டிகளில் இருக்கமாட்டார். ஆஷஸ் தொடருக்காக நாடு திரும்புகிறார் ஆசஸ் தொடரில் பங்கேற்பதற்காக பயிற்சிகளை தொடங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்தவுள்ளார் என அவரே தெரிவித்துவிட்டார்.
இவர்கள் வரிசையில் தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர துவக்க வீரர் ஜானி பேர்ஸ்ட்டோ, ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்க நல்ல உடல் நிலையை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜானி பேர்ஸ்ட்டோ, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. காலில் அடிபட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். தற்போது நன்றாக குணமடைந்திருக்கிறார். ஐபிஎல் விளையாடி மீண்டும் காயமடையக்கூடாது என்று இத்தகைய முடிவை எடுத்திருகிறார் என்று தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் பலர் தங்களது நாடுகளை முக்கியத்துவமாக எடுத்துக்கொண்டு, சர்வதேச போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல்நிலையை கவனிக்கின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து விடுகின்றனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.