ஆர்சிபி-க்கு அடித்தது ஜாக்பாட்… கப் அடிச்சிருவாங்களோ? இந்தியாவை கதிகலங்க வச்சவருக்கு அணியில் இடம்!

வங்கதேசம் தொடரில் காயமடைந்த ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்தை சேர்ந்த பிரேஸ்வெல் எடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. அதில் ஷாம் கர்ரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சுமார் 15 கோடிகளுக்கும் மேல் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

மினி ஏலத்தில் ஆர்சிபி அணியும் சில முக்கிய வீரர்களை எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு சமீபகாலமாக பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு வந்த வில் ஜாக்ஸை, ஏலத்தில் 3.2 கோடிக்கு ஆர்சிபி அணி எடுத்தது.

நல்ல ஃபார்மில் இருந்து வந்த வில் ஜாக்ஸ் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடி வந்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இவருக்கு காலில்  அடிபட்டது. உடனடியாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு இவரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்தும் விலகினார்.

மேலும், ஐபிஎல் போட்டிகளிலும் சில வாரங்கள் வில் ஜாக்ஸ் இடம்பெற முடியாது என்று தெரியவந்தது. சில நாட்களில் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவிப்பு வெளியானது. ஆர்சிபி அணிக்காக எடுக்கப்பட்ட இவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய ஆர்சிபி அணி நிர்வாகம் தேடுதலில் ஈடுபட்டது.

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி 70 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார் மைக்கல் பிரேஸ்வெல். அதற்கடுத்த தொடரிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கலக்கினார்.

இதனால் ஆர்சிபி அணி நிர்வாகம் வீல் ஜாக்சுக்கு மாற்று வீரராக இவரை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு பிரேஸ்வெல் ஒப்புக்கொண்டார். இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன் ஆர்சிபி அணியுடன் இணைகிறார் பிரேஸ்வெல்.

டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆரம்ப விலையாக 1 கோடி ரூபாய்க்கு இருந்த பிரெஸ்வெல்லை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.