சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது சிஎஸ்கே அணி. தற்போது எந்த இடத்தில் இருக்கிறது? எந்தெந்த அணிகள் முன்னிலை பெற்றுள்ளது? என்பதை பின்வருமாறு காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி ஆங்காங்கே விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஹைதராபாத் அணியினர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்குவிக்க முடியவில்லை. இதனால் தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்தது.
இந்த இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரர் டெவான் 77 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆரம்பத்தில் இவருடன் சேர்ந்து நல்ல பாட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்த ருத்துராஜ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அதன்பிறகு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 138 ரன்கள் அடித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியல் விபரம்
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளில் 4 வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் +1.043 ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் அணி அதே 8 புள்ளிகளுடன் +0.709 ரன்ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. சிஎஸ்கே அணி தற்போது 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் +0.355 ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
ஆரஞ்சு கேப் பட்டியல்
டெவான் கான்வெ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் அடித்ததன் மூலம், 6 லீக் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 258 ரன்கள் அடித்துள்ளார். ஆரஞ்சு கோப்பைக்கான அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
6 லீக் போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 343 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் பாப் டு பிளசிஸ்.