ஒவ்வொரு வருசமும் இவனுகளுக்கு இதே வேலையா போச்சு… பாவம் பஞ்சாப் அணி தான் மாட்டிக்கிச்சு; பரிதாபப்படும் முன்னாள் வீரர்
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவால் பஞ்சாப் கிங்ஸ் அணியே பலவீனமாக காட்சியளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் எதிர்வரும் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆசஷ் தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடரில் ரெகுலராக விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் வேறு எந்த தொடரிலும் பங்கேற்க கூடாது என்று தெரிவித்ததால் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.
இந்த திடீர் முடிவு எந்த அணியை பாதிக்கிறதோ இல்லையோ, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.ஏனென்றால் பஞ்சாப் கிங்ஸ் அணி எப்படியாவது டைட்டில் பட்டதை வெல்ல வேண்டும் என்பதற்காக அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் உட்பட அணியின் பெயரையே மாற்றியுள்ளது.
அதுவெல்லாம் வேலைக்காகாத நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆள்ரவுண்டர் சாம் கரனை 18.25 கோடி ரூபாய் ஏலத்தில் ஒப்பந்தம் செய்து இந்த முறையாவது எப்படியாவது வெற்றியை சுவைத்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தது. அந்தக் கனவின் மண்ணள்ளி போடும் வகையில் பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பு இருந்ததால் இது குறித்த விவாதம் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐபிஎல் தொடர் குறித்து தன்னுடைய விரிவான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா., பென் ஸ்டோக்ஸின் இந்த திடீர் முடிவு பஞ்சாப் கிங்ஸ் அணியை பலவீனப்படுத்தியுள்ளது என்று தன்னுடைய யூடியூப் சேனலின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்ததாவது, “பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பால் ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்காமல் போனால், அது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிடும். குறிப்பாக இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குத்தான் மிகப்பெரிய இழப்பாக அமையும், ஏனென்றால் அந்த அணியில் தான் சாம்கரன், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ போன்ற முக்கியமான இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் பங்கேற்காமல் போனால் பஞ்சாப் அணி அகல பாதாளத்தில் சென்று விடும்.
“பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் இவர்களை வைத்துதான் பஞ்சாப் அணி பல திட்டங்களை தீட்டி வைத்துள்ளது. இந்த திடீர் முடிவால் தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணியே பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. இந்த வீரர்களுக்கு பதில் அவர்களிடம் பேக்கப் வீரர்களும் இல்லை” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது.