மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ஐபிஎல் தொடரில் விளையாடுவதை உறுதி செய்த ஜோஃப்ரா ஆர்ச்சர்
2023 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறுவார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.
உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய முட்டி கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் உள்ளார்.
அப்படியிருந்தும் பிற்காலத்தில் பயன்படுவார் என்று 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் இவர் 2023 ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா..? மாட்டாரா..? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜோப்ரா ஆர்ச்சர் 2023 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்று விளையாடுவார் என்ற தகவலை உறுதி செய்துள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் , அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெற மாட்டார் என்பதால் அச்சத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்பொழுது ஆர்ச்சர் வந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.
இருந்த போதும் இவருடைய காயம் காரணமாக எந்த அளவு இவர் போட்டியில் பயன்படுத்தப்படுவார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் மும்பை இந்தியன்ஸ் அணியும் வேலை பளுவை கருத்தில் கொண்டு இவரை முக்கியமான போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தும் என தெரிகிறது.
அடுத்த மாதம் ஏப்ரல் இரண்டாம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் முதல் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.