டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல் ; ரிஷப் பண்டிர்க்கு பதில் புதிய கேப்டன் யார்…
ரிஷப் பண்டிற்கு பதில் புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தவித்து வருகிறது.
(Dec-30) அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைகள் செய்து முடித்த பிறகு, டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்ததில் பல இடங்களில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ., ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டிருக்கும் காயத்தை பட்டியலிட்டுள்ளது. அதில், நெற்றியில் இரண்டு வெட்டு காயங்களும் முட்டியில் கடுமையான காயங்களும் மற்றும் மணிக்கட்டு, பாதத்தில் சிராய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள், ரிஷப் பண்டிற்கு, முட்டியில்(ligament tear) ஏற்பட்டிருக்கும் காயம் குணமாக மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம் என தெரிவித்துள்ளதால் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிகிறது.
இதனால் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கு கொள்ள மாட்டார் என்பதால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தன்னுடைய அணியின் புதிய கேப்டனாக யாரை நியமிக்க போகிறது என்ற சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய டெல்லி அணியில் சீனியர் வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் அக்சர் பட்டேல்போன்ற வீரர்கள் உள்ளதால், இவர்களில் ஒருவரை தான் டெல்லி அணி கேப்டனாக நியமிக்கும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.