இந்த மூனு பேர்ல ஒருத்தர எடுத்துட்டா கூட சென்னை அணியை அடிச்சிக்க முடியாது; முன்னாள் வீரர் பிராட் ஹாக் உறுதி
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தனது கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் 19ம் தேதி நடைபெற உள்ளது. கைவசம் 31.4 கோடி ரூபாய் வைத்திருக்கும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யார் யாரை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ள வீரர்கள் குறித்தான தனது கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரா ஹாக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்சல் பட்டேல் போன்ற ஒருவரை ஏலத்தில் எடுக்க கடுமையாக முயற்சிக்கும். ஹர்சல் பட்டேலை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் அது பெங்களூர் அணிக்கு பெரிய பிரச்சனையாக அமையும். ஹர்சல் பட்டேலின் பந்துவீச்சு சென்னை ஆடுகளத்திற்கு சாதகமாக இருக்கும், அவரிடம் அதிகமான திறமையும் உள்ளது. அதே போல் சென்னை அணி மணிஷ் பாண்டே, டேரியல் மிட்செல் அல்லது ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். சென்னை அணி மணிஷ் பாண்டேவை ஏலத்தில் எடுத்துவிட்டு, மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரில் ஒருவரையும், அடுத்ததாக ஹர்சல் பட்டேலையும் ஏலத்தில் எடுத்துவிட்டால் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஐபிஎல் தொடரில் டாப் 3 இடங்களில் இருக்கும். சென்னை அணியின் தற்போதையை தேவை ஒரு திறமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான்” என்றார்.
மேலும் பேசிய பிராட் ஹாக் “சென்னை அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை சரி செய்ய மணிஷ் பாண்டே சரியான வீரராக இருப்பார். மணிஷ் பாண்டே சிறந்த பீல்டர் ஆனால் மணிஷ் பாண்டேவின் சிறந்த ஆட்டத்தை இதுவரை நாம் பார்க்கவில்லை. சென்னை அணி மணிஷ் பாண்டேவை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் அவரது முழு திறமையும் அடுத்த தொடரில் வெளிப்படும். சென்னை அணியும், சென்னை அணியின் கேப்டனான தோனியும் மணிஷ் பாண்டேவை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.