கடைசி வரை நம்பிக்கையுடன் விளையாடிய பெங்களூர் வீரர்கள்… ஆப்பு வைத்த ராஜஸ்தான் வீரர்கள்; வெளியேறியது பெங்களூர்
17வது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்பின் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு ராஜத் படித்தர் 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய லம்ரோர் 32 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 172 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் ஆகியோர் மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். டாம் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த போது தேவையற்ற ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சஞ்சு சாம்சன் 17 ரன்கள் எடுத்திருந்த போது தேவையே இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய துருவ் ஜூரல் 8 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த ரியான் பிராக் – ஹெட்மயர் ஜோடி பெங்களூர் அணியின் ஈ சாலா கனவை கலைக்கும் விதமாக பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. முகமது சிராஜ் வீசிய போட்டியின் 18வது ஓவரில் ரியான் பிராக் (36) மற்றும் ஹெட்மயர் (26) ஆகியோர் விக்கெட்டை இழந்தது போட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், 19வது ஓவரை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் பதட்டமே இல்லாமல் 19வது ஓவரில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்.
இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.