9 வருச வரலாறு… அவ்ளோ ஈசியா விட்ற மாட்டோம்; பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து மீண்டும் வதம் செய்தது கொல்கத்தா
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி 83* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 182 ரன்கள் குவித்தது.
இதன்பின் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான சுனில் நரைன் (47) மற்றும் பிலிப் சால்ட் (30) ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியின் வெற்றியை முதல் 6 ஓவர்களுக்குள் உறுதிப்படுத்தினர்.
இதன்பின் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 39 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 16.5 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
பெங்களூர் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 9 வருடங்களாக தோல்வியையே சந்திக்காத அணி என்ற வரலாற்றை கொல்கத்தா அணி தக்க வைத்து கொண்டது.