வெறும் 2 விக்கெட்… 16 ஓவரில் முடிந்த போட்டி; முதல் முறையாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்தியது கொல்கத்தா !!

வெறும் 2 விக்கெட்… 16 ஓவரில் முடிந்த போட்டி; முதல் முறையாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்தியது கொல்கத்தா

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரண் 45 ரன்களும், கே.எல் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்சித் ராணாவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் (6) மற்றும் ரகுவான்சி (7) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கொல்கத்தா அணியின் மற்றொரு துவக்க வீரரான பிலிப் சால்ட் லக்னோ அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன்னும் சேர்த்தார்.

பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பிலிப் சால்டிற்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுமையான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

பிலிப் சால்ட் 47 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 89* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும், ஸ்ரேயஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் 15.4 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் வெற்றி இது தான்.

 

Mohamed:

This website uses cookies.