நீ யாரா வேணா இரு… ஆனா எங்ககிட்ட கொஞ்சம் அடங்கியே இரு; பயத்திற்கே பயம் காட்டிய பதிரானா; மும்பையை கெத்தாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

நீ யாரா வேணா இரு… ஆனா எங்ககிட்ட கொஞ்சம் அடங்கியே இரு; பயத்திற்கே பயம் காட்டிய பதிரானா; மும்பையை கெத்தாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில்  பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், சிவம் துபே 66* ரன்களும், கடைசி நேரத்தில் தோனி 4 பந்தில் 20 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

இதன்பின் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிக மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதன் மூலம் மும்ப இந்தியன்ஸ் அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டிங்கின் மூலம் போட்டியின் வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட சென்னை அணி பதிரானாவிடம் போட்டியின் 8வது ஓவரை கொடுத்தது. சென்னை அணி தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய பதிரானா 8வது ஓவரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அடுத்ததாக களத்திற்கு வந்த திலக் வர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த போது பதிரானாவின் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். ரோஹித் சர்மா தனி ஆளாக போராடினாலும், மறுமுனையில் களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்கவில்லை.

ஹர்திக் பாண்டியா (2), டிம் டேவிட் (13), ரொமாரியோ செப்பர்ட் (1) என மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து முக்கிய வீரர்களும் சென்னை அணியின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தனி ஆளாக போராடிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் 105* ரன்கள் குவித்தார்.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தேஸ்பாண்டே மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

Mohamed:

This website uses cookies.