பேட்ஸ்மேன்களை விட மாஸான பேட்டிங்… சதம் அடித்து சாதனை படைத்த சுனில் நரைன்; 223 ரன்கள் குவித்தது கொல்கத்தா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் அதிரடி துவக்க வீரரான பிலிப் சால்ட் 10 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ரகுவான்சி (30), ஸ்ரேயஸ் ஐயர் (11), ஆண்ட்ரியூ ரசல் (13) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (8) ஆகிய கொல்கத்தா அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறி விக்கெட்டை இழந்தாலும், பந்துவீச்சாளரான சுனில் நரைன் துவக்க வீரராக களமிறங்கி போட்டியின் 18வது ஓவர் வரை தனி ஆளாக போராடி அசால்டாக ரன்னும் குவித்தார்.
உலகத்தரமிக்க பேட்ஸ்மேன்களுக்கு நிகரான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுனில் நரைன் 56 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் கடைசி நேரத்தில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 20* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 223 ரன்கள் குவித்துள்ளது.
பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வினை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.