துண்டு ஒரு தடவ தான் தவறும்… ஹீரோவாக மாறிய டேரியல் மிட்செல்… தேஸ்பாண்டே மிரட்டல்; வெற்றி பாதைக்கு திரும்பியது சென்னை சூப்பர் கிங்ஸ் !!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ரன்களும், டேரியல் மிட்செல் 52 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத சிவம் துபே 39 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணி, ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் இரண்டு முக்கிய வீரர்களும், துவக்க வீரர்களுமான அபிசேக் சர்மா (15), டர்வீஸ் ஹெட் (13) ஆகியோரும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அன்மோல்ப்ரீட் சிங் (0) ஆகியோர் துசார் தேஸ்பாண்டேவின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தனர்.
ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நாயகர்களான மார்கரம் (32). கிளாசன் (20) ஆகியோர் பதிரானாவின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷர்துல் தாகூர், ஜடேஜா என அனைத்து பந்துவீச்சாளர்களும் இந்த போட்டியில் சென்னை அணிக்கான தங்களது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்ததன் மூலம் ஹைதராபாத் அணியை 134 ரன்களில் ஆல் அவுட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பதிரானா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பேட்டிங்கில் அரைசதம் அடித்து அசத்திய டேரியல் மிட்செல் பீல்டிங்கும் சிறப்பாக செயல்பட்டு ஐந்து கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.