நூழிலையில் மொத்தமாக மாறிய போட்டி… சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்; டெல்லி கேப்பிடல்ஸ் மிரட்டல் வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 56வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்பின் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த அணியின் அதிரடி நாயகனான ஜேக் பிரேசர் 20 பந்துகளில் 50 ரன்களும், அபிசேக் போரல் 65 ரன்களும், ஸ்டப்ஸ் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 221 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பின் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் (4), பட்லர் (19) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தனி ஆளாக போராடிய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்திருந்த போது அம்பயரின் சர்ச்சையான முடிவால் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் சுபம் துபே 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். போட்டியின் முக்கியமான 18வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் அந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்த ஓவரை வீசிய ரசீக் சலாமும் தனது வேலையை சரியாக செய்து 19வது ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால் கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை ராஜஸ்தான் அணி சந்தித்தது.
கடைசி ஓவரை எதிர்கொண்ட அதிரடி நாயகனான ரோவ்மன் பவல் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.
பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக கலீல் அஹமத், முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.