ருத்ரதாண்டவம்… லக்னோவை கதிகலங்க வைத்த ட்ராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா; 9 ஓவரில் போட்டியை முடித்து வரலாறு படைத்தது சன் ரைசர்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சம்பந்தம் இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த லக்னோ அணி, பேட்டிங்கில் கடுமையாக திணறி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஸ் பதோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரண் 48 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் அதிரடி துவக்க வீரர்களான டர்வீஸ் ஹெட் மற்றும் அபிசேக் சர்மா ஆகியோர் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து அசுர வேகத்தில் ரன்னும் குவித்தனர்.
டர்வீஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதமும், அபிசேக் சர்மா 19 பந்துகளில் அரைசதமும் கடந்து அசத்தினார். விக்கெட்டையும் இழக்காமல், பாரபட்சமுமே பார்க்காமல் லக்னோ அணியின் பந்துவீச்சை அபிசேக் மற்றும் டர்வீஸ் ஹெட் ஆகியோர் சிதறடித்ததன் மூலம் 9.4 ஓவரிலேயே இலக்கை மிக மிக இலகுவாக எட்டிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. மொத்தமாக அபிசேக் சர்மா 28 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், டர்வீஸ் ஹெட் 30 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 89 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
160+ ரன்கள் என்ற இலக்கை 10 ஓவர்களுக்குள் எட்டிய முதல் அணி என்ற பெருமையுடன் சேர்த்து, லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.