3 போட்டிகளில் வில்லன்… இன்று ஹீரோ… தனி ஆளாக போட்டியை மாற்றிய மோஹித் சர்மா; சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி !!

3 போட்டிகளில் வில்லன்… இன்று ஹீரோ… தனி ஆளாக போட்டியை மாற்றிய மோஹித் சர்மா; சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த  குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே மிக மிக மோசமாக அமைந்தது. துவக்க வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே ஆகியோர் தலா 1 ரன்னிலும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் டக் அவுட்டும் ஆகிய சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் தனது மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேரியல் மிட்செல் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சென்னை அணியின் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்தனர்.

போட்டியின் முதல் 10 ஓவர்களுக்கு பிறகு மொய்ன் அலி மற்றும் டேரியல் மிட்செல் இருவரும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். டேரியல் மிட்செல் 27 பந்துகளில் அரைசதமும், மொய்ன் அலி 31 பந்துகளில் அரைசதமும் அடித்து அசத்தினர்.

10 ஓவர்களுக்கு பிறகு போட்டி சிறிது சிறிதாக சென்னை அணியின் கைவசம் வந்து கொண்டிருந்த நிலையில், போட்டியின் 13வது ஓவரை வீசிய மோஹித் சர்மா அந்த ஓவரில் 2வது பந்தில் டேரியல் மிட்செல்லின் (63, 34 பந்துகள்) விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே போல் தனது அடுத்த ஓவரில் மொய்ன் அலியையும், அதற்கு அடுத்த ஓவரில் சிவம் துபேவையும் வெளியேற்றி, மோஹித் சர்மா தனி ஆளாக போட்டியை குஜராத் அணிக்கு சாதகமாக மாற்றி கொடுத்தார்.

கடைசி நேரத்தில் ஜடேஜா 18 ரன்களும், சிவம் துபே 21 ரன்களும், தோனி 11 பந்துகளில் 26* ரன்களும் எடுத்து கொடுத்தாலும், சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

கடந்த 3 போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் அதிகமான ரன்களையும் வாரி வழங்கிய மோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி கொடுத்தார். ரசீத் கான் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது. இக்கட்டான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எஞ்சியுள்ள தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.