அதே தவறு… அதே சொதப்பல்… பெங்களூரிடம் தப்பித்து ஹைதராபாத்திடம் சிக்கி கொண்ட ராஜஸ்தான்; கெத்தாக இறுதி போட்யில் கால் வைத்தது ஹைதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்த அரையிறூதி போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கிளாசன் 50 ரன்களும், திரிபாதி 37 ரன்களும், ஹெட் 34 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் அதிரடி துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய ஹெட்மயர் (4), ரியான் பிராக் (6), ரோவ்மன் பவல் (6) உள்ளிட்ட ராஜஸ்தான் அணியின் மிக முக்கிய வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினர்.
தனி ஆளாக இறுதி வரை போராடிய துருவ் ஜூரல் விக்கெட்டை இழக்காமல் 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மிடில் ஓவர்களில் சொதப்பியதாலும் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறியதாலும் ஈசியாக வெற்றி பெற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.
பந்துவீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக சபாஷ் அஹமத் 4 ஓவரில் வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். புவனேஷ்வர் குமாரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நடராஜன் 3 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஹைதராபாத் அணி, 26ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.