இரண்டாவது போட்டியிலும் டூ பிளசிஸ் விளையாடுவது சந்தேகம்; கடுப்பில் ரசிகர்கள்
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டூ பிளசிஸ் இன்று நடைபெறும் கொல்கத்தா அணியுடனான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு வருடங்களாக ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளதால் மற்ற தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ரசிகர்களின் இரண்டு ஆண்டு எதிர்பார்ப்பை வீணாக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்த 7ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது.
முதல் போட்டியில் பிரோவோவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். பிராவோ தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாமல் இருந்திருந்தால் சென்னை அணி அந்த போட்டியில் மிக மோசமாக தோல்வியை சந்தித்திருக்கும்.
சென்னை அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட மிடில் ஆர்டரில் டூ பிளசிஸ் களமிறங்கிவிட்டால் சென்னை அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், டூ பிளசிஸ் இன்று நடைபெறும் கொல்கத்தா அணியுடனான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டூவைன் பிராவோ, கர்ன் சர்மா, சேன் வாட்சன், ஷர்துல் தாகூர், அம்பத்தி ராயூடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூ பிளஸிஸ், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், நிகிதி, ஆசிஃப், ஜெகதீஷன், கன்சிக் செத், மோனு சிங், துருவ் சோரே, கிஷித் சர்மா, சைதன்யா பிசோனி.