ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தமிழக இளம் வீரர் மணிமாறன் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
14வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் கெய்ல் ரிச்சர்ட்சன் போன்ற இளம் வீரர்களுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக போராடின. இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கும் ஏலம் போயினர். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக் கானை பஞ்சாப் அணி 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அதே போல் மணிமாறன் சித்தார்த் என்னும் தமிழக வீரரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தநிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள மணிமாறன் சித்தார்த், டெல்லி அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினிடம் இருந்து நிறைய விசயங்களை கற்று கொள்ள ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மணிமாறன் சித்தார்த் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரவி அஸ்வின் டெல்லி அணியில் இருப்பதால் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடியும். அவருடன் இணைந்து டெல்லி அணியில் பயணிக்க இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
முன்பு கொல்கத்தா அணியில் தேர்வாகி இருந்தேன், ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்காத சூழலிலும் பல்வேறு விஷயங்களை கற்று கொண்டேன், இந்த முறை சிறப்பாக செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இளம் பந்துவீச்சாளரான மணிமாறன் சித்தார்த், அண்மையில் முடிந்த சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிகமுக்கிய காரணமே அவரது பந்துவீச்சு தான். 20 ரன்கள் மட்டுமே கொடுத்து பரோடா அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.