அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடத்தப்படும் தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் டி.20 தொடரில் இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. 15வது சீசனான அடுத்த தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. அடுத்த தொடரில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்க உள்ளதால் இந்த தொடருக்காகவும், இந்த தொடருக்கான ஏலத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மெகா ஏலம் டிசம்பர் மாத இறுதிக்குள் அல்லது ஜனவரி மாத முதல் வாரங்களில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெகா ஏலமானது பிப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் பெங்களூர் வைத்து நடத்தப்படும் என கிரிக் இன்போ, கிரிக்பஸ் போன்ற பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி மாதத்தில் ஒமிகிரான் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தான் மெகா ஏலம் பிப்ரவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள் மெகா ஏலம் இனி தேவை இல்லை என கூறி வருவதால், இதுவே ஐபிஎல் வரலாற்றில் நடத்தப்படும் கடைசி மெகா ஏலமாக இருக்கும் என தெரிகிறது.