கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு
ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம் கம்பீருக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் தனக்கு கிடைக்கவில்லை என கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சூதாட்ட புகாரில் சிக்கி ஒட்டுமொத்த இந்திய அணியும் சின்னாபின்னமாகி இருந்த நிலையில், கேப்டன் அவதாரம் எடுத்த சவுரவ் கங்குலி இந்திய அணியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவர். சமகால கிரிக்கெட் உலகின் வல்லரசாக இன்று இந்திய அணி திகழ்வதற்கு விதை போட்டவரே சவுரவ் கங்குலி தான் என்றால் அது மிகையல்ல. அவர் போட்டு கொடுத்த பாதை மற்றும் அவர் உருவாக்கிய வீரர்களே இந்திய அணியை தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்திய அணியின் வெற்றி கேப்டனாக ஜொலித்த சவுரவ் கங்குலியால், ஐ.பி.எல் தொடரில் ஜொலிக்க முடியவில்லை. கடந்த 2008ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சவுரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. இதனால் கங்குலியின் கேப்டன்சி மீது விமர்ச்சனங்கள் ஏற்பட்டது, மேலும் இதன் காரணமாக அணி உரிமையாளரான ஷாருக் கானுடன் கங்குலிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் உண்டு.
2010ம் ஆண்டு வரை கொல்கத்தா அணிக்காக விளையாடிய கங்குலி அதன் பின்னர் புனே போன்ற அணிக்களுக்காக விளையாடினார். கங்குலிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு இரண்டு சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்தார். இதனால் கங்குலியை விட கம்பீர் தான் சிறந்த கேப்டன் என்ற விவாதமும் அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டது.
இந்தநிலையில், சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில் கொல்கத்தா அணியில் கம்பீருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் தனக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியதாவது;
இது உங்கள் அணி, உங்கள் கேப்டன்சியில் நான் எப்பொழுதும் தலையிட மாட்டேன் என ஷாருக் கான் கூறியதாக கம்பீர் கூறிய பேட்டியை நான் சமீபத்தில் பார்த்தேன். இதைத்தான், 2008ல் நான் ஷாருக்கானிடம் கூறினேன். அணியை என்னிடம் விட்டுவிடுங்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். ஆனால் அது நடக்கவே இல்லை. கம்பீருக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் எனக்கு வழங்கப்படவில்லை. கேப்டனுக்கு சுதந்திரம் இல்லாவிட்டால் நிச்சயமாக அவரால் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தவே முடியாது. தோனி, ரோஹித் சர்மா போன்றோர் தங்களது அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தி வருவதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரமே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.