“நீங்க நினைக்கிற மாதிரி அவரு மோசமான கேப்டன் இல்லை..”; முன்னாள் கேப்டனின் பெருமையை கூறிய இர்பான் பதான்!

“நீங்க நினைக்கிற மாதிரி அவரு மோசமான கேப்டன் இல்லை..”; முன்னாள் கேப்டனின் பெருமையை கூறிய இர்பான் பதான்!

அனைவரும் நினைப்பது போல அவர் மோசமான கேப்டன் இல்லை.. இன்றும் சிறந்த கேப்டன் என ராகுல் டிராவிடின் கேப்டன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

இந்திய அணியின் பெருஞ்சுவர் என செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் முந்தைய தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு திகழ்ந்து வந்தார். தடுப்பு ஆட்டத்தில் கைதேர்ந்தவராக இருந்த இவர், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது லிமிட்டட் ஓவர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

இவர் இந்திய அணிக்கு சிலகாலம் கேப்டன் பொறுப்பிலும் இருந்திருக்கிறார். இவர் தலைமையில் இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகளிலும், 79 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறது.

2007ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் லீக் சுற்றில் வங்கதேச அணியிடம் படுதோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி. இதனால், இந்திய கிரிக்கெட் அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு மட்டுமல்லாமல், வீரர்களின் வீடுகளும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.

அந்த படுதோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட் ஒரு மோசமான கேப்டன் என அனைத்து ஊடகங்களும் சித்தரிக்க தொடங்கின. இதனால் ரசிகர்கள் அவரை மோசமான கேப்டனாக பார்க்கத் துவங்கினர்.

இந்நிலையில் ராகுல் டிராவிட் நல்ல வீரர் மட்டுமல்லாமல், சிறந்த கேப்டனும்கூட. அவருக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் இரண்டும் கிடைக்கவில்லை என ராகுல் டிராவிட்டின் கேப்டன்ஷிப் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான்.

பதான் கூறுகையில், “ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்கள். அந்தவகையில், ராகுல் டிராவிட்டும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய கேப்டன். உலக கிரிக்கெட்டில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அணி வீரர்களிடம் இருந்து என்ன தேவை என்பது டிராவிட்டுக்கு தெளிவாக தெரியும். வீரர்களுடனான ராகுல் டிராவிட்டின் கம்யூனிகேஷன் தெளிவாக இருக்கும். இதுதான் உனது ரோல்; அதற்கேற்றபடி தயாராகி கொள்ளுங்கள் என்று தெளிவாக சொல்லிவிடுவார்.

ஒவ்வொரு வீரரும் எதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என அனைவருக்கும் கூறிக்கொண்டே இருப்பார். அதற்கு முன்னுதாரணமாக டிராவிட் விளங்கினார். அணிக்கு தேவை என்றால், விக்கெட் கீப்பிங் செய்வார். தொடக்க வீரராகவும் இறங்குவார். 3ம் வரிசையிலும் இறங்குவார். விக்கெட் சரியும் நேரங்களில் கீழ் வரிசையில் இறங்கி அணிக்கு தூணாக நிற்பார்.

ராகுல் டிராவிட்டை சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் இல்லை என்றால், எவ்வாறு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.