வெளிநாட்டு டி20 தொடைரில் ஆடப்போகும் முதல் இந்தியர்: இந்திய வீரர் சாதனை!

வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் டி20 தொடரில் விளையாட தேர்வாகி இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான். இதையடுத்து வெளிநாட்டு லீக்கில் விளையாட தேர்வாகியுள்ள முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போல, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட சில நாடுகள் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் யாரும் பங்குபெற்றதில்லை. அதாவது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளில் விளையாட, வீரர்களை அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் இடம்பிடித்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இருபது நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியலில் பதானும் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி யில், பதானை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது தெரியவில்லை.

ஏதாவது ஒரு அணி ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது.

கரீபியன் லீக் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஹால் கூறுகையில், ” எங்கள் லீக்கில் இடம் பெறுவதற்காக ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தார்கள். கரீபியன் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும், உயர்தரமான கிரிக்கெட்டை வழங்கும் என்பதால் வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு லீக்கை வித்தியாசமாக நடத்த விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்த கரீபியன் லீக் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், மெக்கல்லம், உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர்.

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு ஆண்டுகளாக விளையாடமல் இருந்த பதான் முதல்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாட உள்ளார். இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள பதான் 300 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார், 2,800 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்துள்ளார் பதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை சிஎஸ்கே, டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், புனே சூப்பர் ஜெயின்ஸ்ட், சன்ரைசர்ஸ் அணி ஆகியவற்றில் பதான் விளையாடியுள்ளார். பராடோ மாநிலத்துக்காக விளையாடி வந்த பதான் அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக விளையாடி, அங்குள்ள மாநிலஅணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.

 

Sathish Kumar:

This website uses cookies.