“தோனியின் ருத்ரதாண்டவம் பாத்தது இல்லையே.. இனிமே பாப்பீங்க” முன்னாள் சிஎஸ்கே வீரர் எச்சரிக்கை!
வருகிற ஐபிஎல் தொடரில் தோனிக்கு பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் தோனியின் ருத்ர தாண்டவத்தை பார்க்க போகிறார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இவர் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் ஆடப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரில் ஆடி முடித்த பிறகாவது தோனி ஓய்வு முடிவை அறிவித்து இருக்கலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை காணலாம் என இருந்த ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டதும் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும் ஓய்விற்கு பிறகு அவரது வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென கிரிக்கெட் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த ஐபிஎல் தொடரில் தோணிக்கு பந்துவீசும் பந்து வீச்சாளர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் இந்திய வீரருமான இர்பான் பதான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில்,
“ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெற்ற பந்துவீச்சாளர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். ஏனெனில் இனிமேல் பந்துவீசத் தேவையில்லை என அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த அளவிற்கு அதிரடியாக ஆடக் கூடியவர் என பலருக்கு தெரியும். இந்திய அணியில் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என வந்துவிட்டால் தோனியின் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் ஐபிஎல் தொடரில் ருத்ர தாண்டவத்தை ஆடுவதற்காக காத்திருப்பார். அதை நானும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் பவுலர்களை நான் எச்சரித்துக் கொள்கிறேன்.” என பேசினார்.