கூல் கேப்டன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த போது, வேக பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியதால் தங்களால் அதிக அளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாக இஷாந்த் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஷாந்த் சர்மா, தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் அப்போது அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் தோனி பயன்படுத்துவார் என்று தெரிவித்தார். அதனால் பந்துவீச்சாளர்களிடையே போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்ததாக இஷாந்த் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய இஷாந்த் சர்மா, தற்போது கோலியின் தலைமையில் பந்துவீச்சாளர்கள் இடையே தற்போது 3 முதல் 4 பத்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்டுத்தப்படுவதால் அவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பும் புரிதலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறைவான பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக அனுபவமும் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் கூறினார். மேலும் தோனி கேப்டனாக இருந்த காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் 2010ம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் பல நாட்கள் தனது தூக்கத்தை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இப்பொழுது எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் தனது முழு திறமையையும் பந்துவீச்சின் மீதே வெளிப்படுத்துவதாகவும் இஷாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.