டெல்லி அணியில் இருந்து மேலும் ஒரு முக்கிய வீரர் விலகல்; ரசிகர்கள் கவலை
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மிக முக்கிய சீனியர் வீரர்களில் ஒருவரான இஷாந்த் சர்மா, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடருக்கு வழக்கம் போல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் இந்த தொடர் சூடு பிடித்திருக்கும் நிலையில், மறுபுறம் காயம் காரணமாக வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அமித் மிஸ்ராவும் கடந்த, கொல்கத்தா அணியில் இருந்து அலி கானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகியிருந்த நிலையில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான இஷாந்த் சர்மாவும் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சீனியர் வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் சர்மா நெஞ்சு எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார், இந்தநிலையில் இஷாந்த் சர்மா இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியே அறிவித்துள்ளது.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
ஏற்கனவே அமித் மிஸ்ரா, ஜேசன் ராய் போன்ற சீனியர் வீரர்கள் விலகியுள்ள நிலையில், தற்போது இஷாந்த் சர்மாவும் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இஷாந்த் சர்மாவிற்கு பதிலான மாற்று வீரரை அணியில் சேர்த்து கொள்வதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தெரிவித்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது கூடுதல் தகவல்.