முதல் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 124 ரன்கள் மட்டுமே குவித்து இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் கேஎல் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதில் தவான் 4 ரன்னும் கேஎல் ராகுல் 1 ரன்னும் குவித்துள்ளனர்.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 5 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகினர். இதையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் 21 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இதன்பிறகு ஹர்திக் பாண்டியா ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி வந்த பாண்டியாவின் விக்கெட்டை ஆர்ச்சர் தட்டி தூக்கினார். பாண்டியாவை தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் அதற்கு அடுத்த பந்திலேயே ஆர்ச்சரிடம் தனது விக்கெட்டை இழந்து டக் அவுட்டானார்.
இதன்பிறகு ஸ்ரேயாஸ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அதிரடியாக விளையாடி வந்த போது ஜார்டனிடம் தனது விக்கெட்டை இழந்தார். இதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் களம் இறங்கி விளையாடினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் மட்டுமே குறித்தது. இதில் ஐயர் 48 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 67 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆர்ச்சர் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இங்கிலாந்து அணி 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த சொதப்பலான ஆட்டம் குறித்து அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.