தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் முன்பு, என்னிடம் இதைத்தான் சொன்னார்; 7 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவுகூறிய ரவி சாஸ்திரி!!

தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முன்பு என்னிடம் இதை மட்டுமே சொன்னார் என்று 2014 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவு கூறி, சமீபத்திய பேட்டியில் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு 2014ஆம் ஆண்டு வரை கேப்டன் பொறுப்பில் இருந்த மகேந்திரசிங் தோனி, தனது டெஸ்ட் போட்டியின் ஓய்வு முடிவை அறிவித்த விதம் அப்போது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2014ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி விளையாடி வந்தது. அப்போதைய போட்டி டிராவில் முடிந்த பிறகு நேராக டிரெஸ்ஸிங் ரூம் சென்ற மகேந்திர சிங் தோனி, அப்போது இந்திய அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பரிசளிப்பு நிகழ்வில் பேட்டியளித்தார்.

தனது பேட்டியின் முடிவில் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ‘நான் இத்துடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொளகிறேன்.’ என்றார். இதனைக் கேட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த பேட்டிக்கு முன்பாக உண்மையில் என்ன நடந்தது? மற்றும் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக தன்னிடம் என்ன பேசினார்? என ரவி சாஸ்திரி ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை சமீபத்திய பேட்டியின்போது நினைவு கூறியுள்ளார்.

“பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. போட்டி டிராவில் முடிந்த பிறகு மகேந்திர சிங் தோனி நேராக என்னிடம் வந்து, ‘நான் வீரர்களிடம் பேச வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். நானும் அதற்கு ‘நிச்சயமாக பேசலாம்’ என்று பதிலளித்தேன். அதன் பிறகு நேராக பரிசளிப்பு நிகழ்வின் போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இந்த செய்தி எனக்கு மட்டுமல்லாது வீரர்களுக்கும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது, ‘எனது மனநிலை ஒத்துக்கொண்டாலும் எனது உடல் ஒத்துழைக்கவில்லை. போதும் என்று என்னிடம் கூறுகிறது. ஆகையால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறேன்.’ என்று தெரிவித்தார். மேலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நீண்ட நாட்கள் விளையாடுவதற்காக இந்த முடிவை அவர் எடுத்தார் என நானும் புரிந்து கொண்டேன். இப்படி அதிர்ச்சிகரமாக பல விஷயத்தை செய்யக்கூடியவர் தான் மகேந்திர சிங் தோனி.” என்றுக்கூறியபடி ரவி சாஸ்திரி தனது பேட்டியை முடித்தார்.

Mohamed:

This website uses cookies.