எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது இந்த முன்னாள் இந்திய வீரர்தான்: மெக்கல்லம் நெகிழ்ச்சி

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் விளாசியது என் வாழ்க்கையை மாற்றியது என மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணிக்குள் முடிந்து விடுவதால் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.

இதனால் பிசிசிஐ இந்தியாவில் 8 அணிகளை கொண்டு பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை 2008-ல் அறிமுகம் செய்தது, உள்ளூர் மற்றும் வெளிநாடு வீரர்கள் என 8 அணிகளும் ஏலம் மூலம் வீரர்களை தங்கள் அணிக்கு எடுத்துக்கொண்டது.

முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறியது. இதில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராகுல் டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இந்திய ரசிகர்களுக்கு இது புதுசு என்பதால் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல் போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் விஸ்வரூபம் எடுத்து ஆட்டமிழக்காமல் 73 பந்தில் 158 ரன்கள் குவித்தார். இந்த அதிரடிதான் ஐபிஎல் தொடரை பிரபலப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டுவதும், டெத் ஓவர்கள் பரபரப்பாக செல்வதும் என இருந்ததால் ரசிகர்கள் மைதானத்திற்குள் குவிந்தனர். இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்ததுதான் எனது வாழ்க்கையை மாற்றியது என பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘என்னால் ஏராளமான ரியாக்சனை நினைவுப்படுத்த முடியவில்லை. ஆனால், அன்று இரவு என்னிடம் வந்து சொன்னதை ஞாபகப்படுத்த முடியும்.

கங்குலி என்னிடம் வந்து உங்களுடைய வாழ்க்கை ஒரேநாளில் மாறிவிட்டது என்றார். எனக்கு அந்த நேரத்தில் அதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லை. தற்போது நினைத்து பார்க்கையில், அவர் சொன்னதை 100 சதவீதம் ஒத்துக்கொள்கிறேன். அணி உரிமையாளர் ஷாருக்கான் என்னிடம் எப்போதுமே நைட் ரைடர்ஸ் உடன் இருப்பீர்கள் என்றார்.

நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய காலத்திலும், அங்கிருந்து வெளியேறிய காலத்திலும் சிறந்த உறவுடன்தான் இருந்தோம். நான் எப்போதுமே மிகவும் விசுவாசமாகத்தான் இருந்தேன். எனக்கு கொல்கத்தா அணி கொடுத்த வாய்ப்பிற்காக நன்றி சொல்லியாக வேண்டும்.

மீண்டும் எனக்கு கொல்கத்தா அணி வாய்ப்பு கொடுத்தபோது (பயிற்சியாளராக), ஷாருக்கான் என்னிடம் எப்போதுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஈடுபட்டு இருப்பீர்கள் என்று கூறியதை நினைத்து பார்க்கிறேன்.’’ என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.