கொஞ்சம் கூட கவலை இல்ல… எல்லாம் என் நல்லதுக்கு தான்; பெருந்தன்மையுடன் பேசிய இஷான் கிஷன் !!

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் தான் சோர்வடையவில்லை என இளம் வீரரான இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான், ரவி பிஸ்னோய் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து குறையே சொல்ல முடியாத அளவிற்கு பேட்டிங்கில் செயல்பட்டு வந்த இளம் வீரர் இஷான் கிஷனிற்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. கே.எல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாலும், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இந்திய அணியில் இருப்பதாலும் இஷான் கிஷனிற்கு இடம் கொடுக்கப்படவில்லை.

பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷனிற்கு ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வரும் நிலையில், இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காததால் பெரிய வருத்தம் எதுவும் இல்லை என இஷான் கிஷன் பெருந்தன்மையுடன் பேசியுள்ளார்.

இது குறித்து இஷான் கிஷன் பேசுகையில், “ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வாளர்கள் மிக சரியாகவே செய்துள்ளனர். ஒவ்வொரு வீரரை தேர்வு செய்யும் போதும் பல விசயங்களை யோசித்து தான் தேர்வு செய்திருப்பார்கள். எனவே எனக்கு இடம் கிடைக்காததால் நான் வருத்தப்படவில்லை. எனக்கு இந்த முறை இடம் கிடைக்காததால், அடுத்த முறை எப்படியாவது அணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தோடு கூடுதலாக முயற்சியும், பயிற்சியும் செய்வேன். தேர்வுக்குழுவிற்கு என் மீது நம்பிக்கை வரும் பொழுது கண்டிப்பாக எனக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். அதுவரை நான் காத்திருப்பேன், முன்பை விட கூடுதலாக பயிற்சிகளும் மேற்கொள்வேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.