ஐபிஎல் தொடர் நடக்கவே கூடாது; முன்னாள் வீரர் கடும் கோபம் !!

பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே உதவும் ஐபிஎல் போன்ற தொடர்களில் தங்களது வீரர்கள் விளையாடுவதை கிரிக்கெட் வாரியங்கள் அனுமதிக்க கூடாது என முன்னாள் வீரர் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் டி.20 தொடர், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மற்ற நாடுகள் தங்களது நாடுகளில் வேறு வேறு பெயர்களில் உள்ளூர் டி.20 தொடர்களை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றன.

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத டி.20 தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், டி.20 தொடர்கள் பணம் சம்பாதிப்பதற்கே உதவும், இது போன்ற கிரிக்கெட் தொடர்கள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதுள்ள மோகத்தை குறைத்து விடும் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் பணம் சம்பாதிக்க டி.20 தொடர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க நேரிடும் என்றும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர்களின் ஆதங்கத்திற்கு ஏற்ப சூதாட்டமும் டி.20 தொடர்கள் மூலம் தலை தூக்கி வருகிறது.

இந்தநிலையில், ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் ஐபிஎல் போன்ற தொடர்களில் தங்களது வீரர்கள் விளையாடுவதற்கு எந்த நிர்வாகமும் ஒப்புக்கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆலன் பார்டர் பேசுகையில், “உள்ளூர் டி20 போட்டிகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை காட்டிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது தான் எனது விருப்பம். பாக்கெட் முழுவதும் பணத்தை நிரப்பிக் கொள்ள இந்த உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுவதாக கருதுகிறேன். மேலும் ஐபிஎல் விளையாட தங்கள் வீரர்களை கிரிக்கெட் வாரியங்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிப்பதாவே தெரிகிறது. அதை கோலி மாதிரியான வீரர்களும், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தான் மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முன் வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.