நாங்கள்தான் வெற்றி பெறுவொம்; மோடியை சீண்டிய ஆஸி பிரதமர்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண ஏற்கெனவே 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி நாளை உலக மகளிர் தினம் என்பதால் இந்த இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. இத்தொடரின் அரையிறுதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றதால் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

 

மேலும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்று இறுதிக்கு முன்னேறியது. இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்காட் மோரிசன் டேக் செய்திருந்த ட்வீட்டில் ” ஹாய் நரேந்திர மோடி, மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மெல்பர்னில் நடைபெறுகிறது. இரு அணிகளுமே தலைசிறந்தவைதான், இந்தப் போட்டியைக் காண பெரும் கூட்டம் இருக்கும். மிகப் பெரிய இரவாக இருக்கும். விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆனால் இறுதியாக ஆஸ்திரேலியாதான் வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை நாக் – அவுட் சுற்றுகளில் எதிரணியை வீழ்த்தும் யுத்தியை கச்சிதமாக அறிந்துள்ளது, சொந்த மைதானத்தில் விளையாடுவது ஆகியவை ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் வலுசேர்கிறது.மேலும் ஷபாலி வர்மா ஒருவர் மட்டுமே பேட்டிங்கில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் 100 ரன்களுக்கு அதிகமாக நடப்பு தொடரில் அடித்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலிஸா ஹீலி 161 ரன்களும், பெத் மூனே 181 ரன்களும் விளாசியுள்ளனர். தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்து வரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் மேகன் ஷட் , ஜெஸ் ஜோனசன் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.

இந்திய அணி பெருமளவில் பந்துவீச்சை நம்பி களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் vs இந்திய அணியின் பவுலிங் இடையே நடைபெறும் யுத்தமாக இறுதி போட்டி இருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டு தொடரை தொடங்கிய இந்திய அணி அதே ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டு முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Sathish Kumar:

This website uses cookies.