நாளை (புதன்) இந்தியா-பாகிஸ்தான் பரபரப்பான ஆட்டத்தில் மோதவிருப்பதால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் களைகட்டத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டி குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் கூறியதாவது:
ஓர் அணியாக ரெகுலர் கேப்டன் (கோலி) இல்லாதது ஒரு காரணியாக அமையும். மனத்தளவில் ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கும். ஆனால் இந்திய அணியில் சிறப்பாக ஆடியிருக்கும் போதுமான வீரர்கள் இந்தத் தொடரில் உள்ளனர்.
இங்குள்ள உஷ்ணமான நிலை இருவருக்குமே பொதுவானதுதான். பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலை கடுமையாக இருந்தால் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரரின் இருப்பு வித்தியாசம் காட்டும், இங்கு இந்த இந்திய அணியிலேயே போதுமான வீரர்கள் உள்ளனர்.
மொகமது ஆமிர் சில காலமாக விக்கெட்டுகளை அதிகம் கைப்பற்றவில்லை. நான் இது பற்றி கவலையில் அவரிடம் பேசினேன், எப்படியாயினும் விக்கெட்டுகள் மட்டுமே ஒருவரது திறமையை பிரதிபலித்து விடாது, மொகமது ஷமியை எடுத்துக் கொள்ளுங்கள் இங்கிலாந்தில் பிரமாதமாக வீசினார் ஆனால் விக்கெட்டுகள் விழவில்லை.
இப்போது மொகமது ஆமீரிடம் பேசியுள்ளேன், அவர்தான் அணியின் ஸ்ட்ரைக் பவுலர் என்று கூறியிருக்கிறேன். அவர் விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். நாளை விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று நம்புகிறேன்.
இந்திய அணி எங்கள் பந்து வீச்சை எதிர்கொள்ள நல்ல தயாரித்திருக்கலாம் நாங்களும் அவர்கள் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகவே வந்துள்ளோம். இந்திய பேட்டிங்குக்கும் எங்கள் பவுலிங்குக்குமான போட்டி என்ற பேச்சு இனி இல்லை காரணம் எங்கள் பேட்டிங்கும் இப்போது நன்றாக உள்ளது.
ஆனால் இந்தத் தொடருக்கு முன் தோல்வி அடைந்து வந்திருப்பதால் இந்திய அணி மனதளவில் கொஞ்சம் பின்னடைவு கண்டிருக்கும். ஆனால் ஒரு நல்ல போட்டியாக அமையும்.
இவ்வாறு கூறியுள்ளார் பாக்.கேப்டன் சர்பராஸ் அகமட்.