இங்கிலாந்து அணி இம்முறை உலகக்கோப்பையை வென்றால், இந்த புதுவித சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடர் 12வது சீசன் ஆகும். இதில் இருவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா மற்றும் வேஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை இரு அணிகளும் தலா 1 முறையும் வென்றுள்ளன. இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றிராத காரணத்தினால், இம்முறை வெல்லும் அணிக்கு இது முதல் கோப்பையாகும்.
1975 முதல் 2007 வரை உலகக் கோப்பை தொடரை நடத்திய உள்ளூர் நாடு இறுதிப்போட்டியில் வென்றதில்லை. 1996-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து தொடரை நடத்தின. இருப்பினும் இறுதிப்போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. அதில் இலங்கை அணி வென்றது.
முதன்முறையாக, இந்தியா மட்டுமே 2011-ல் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியதோடு இந்தியாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் வென்று கோப்பையை வென்றது. அடுத்ததாக, 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மோதின. அதில் உள்ளூர் அணியான ஆஸ்திரேலியா வென்றது.
இந்நிலையில், 2019 உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோத இருக்கின்றன.
இதில் இங்கிலாந்து வென்றால் போட்டியை நடத்தும் நாடு தொடர்ச்சியாக மூன்றுமுறை வென்று ஹாட்ரிக் சாதனையாக அமையும்.
2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.