ஜெய்ஸ்வால் இப்படி பண்ணுவான்னு நெனச்சே பாக்கல… எங்க தோல்விக்கு ஜெய்ஸ்வால் காரணமில்லை, ஆரம்பித்துவைத்த எங்கள் அணி வீரர் தான் – நிதிஷ் ராணா பேட்டி!

இது ஜெய்ஸ்வால் நாள். மிகச் சிறப்பாக விளையாடினார். இன்று நாங்கள் பெற்ற தோல்விக்கு முக்கிய காரணம் இவர் தான் என்று பேசியுள்ளார் நித்திஷ் ராணா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். நித்திஷ் ரானா 22 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் அணிக்கு பவுலர் சஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கொல்கத்தாவை திணறடித்தார்.

இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் இருந்தே வெளுத்து வாங்கினார். நித்திஷ் ரானா வீசிய முதல் ஓவரில் 26 ரன்கள் விளாசியதில் துவங்கி, அடுத்த ஓவரில் 20 ரன்கள் என 3 ஓவர்கள் முடிவதற்குள் 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறும் படைத்தார்.

கேப்டன் சஞ்சு சாம்சனும் நிறுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாச ராஜஸ்தான் அணி விரைவாக இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஜெய்ஸ்வால் 98(47) ரன்கள், சஞ்சு சாம்சன் 48(29) ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மிக முக்கியமான போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேட்டியளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நித்திஷ் ரானா பேசுகையில்,

“இன்று ஜெய்ஸ்வால் ஆடிய விதத்திற்கு அவரை பாராட்ட வேண்டும். இன்று அவரது நாள். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவிற்கு இருந்தது.

இது 180 ரன்கள் அடிக்கக்கூடிய பிட்ச் என்று நான் டாஸ் போடும்போது கூறினேன். நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. இதனால்தான் இன்று இரண்டு புள்ளிகளை பெறமுடியாமல் போனது.

நான் இன்றைய போட்டியில் முதல் ஓவரை வீசவேண்டும் முடிவெடுக்க காரணம், ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதும் ஒவ்வொரு அணியின் சிறந்த பவுலர்களையும் சிறப்பாக விளையாடினார். ஆகையால் அவர் கணிக்க முடியாத அளவிற்கு இருக்குமென்று திட்டமிட்டு அந்த முடிவை எடுத்தேன். ஆனால் இன்று அவருடைய நாள். எங்களது திட்டம் எதுவும் எடுபடவில்லை. முதல் ஓவரில் இருந்தே அடிக்க ஆரம்பித்துவிட்டார். அங்கு தான் தவறு நடந்தது என்று நினைக்கிறேன்.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.