ஐபிஎல் 11-வது சீசன் போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சிறப்பாக ஆப் ஸ்பின் வீசக்கூடிய அஸ்வின் கூட லெக்ஸ்பின்னுக்கு மாறிவிட்டார் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பையில் கிரேமேட்டர் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் கிரிக்கெட் காமெடி ஷோ நடந்தது. இதில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அறியாத கங்குலி, தெரியப்படுத்திய சேவாக்; கிரெக் சாப்பல் செய்தது என்ன?
ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு பந்துவீச்சாளரும், ஒவ்வொரு விதமாகப் பந்துவீச்சை தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிவரை எனக்குத் தெரிந்து லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்கள்தான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கான துருப்புச்சீட்டாக இருந்து வந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு அணியிலும் லெக்ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.
ஏன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆப்-ஸ்பின்னராக இருந்தால் கூட அவரே இப்போது லெக் ஸ்பின் வீசும் அளவுக்கு மாறிவிட்டார். இதிலிருந்தே தெரிகிறது லெக்ஸ்பின்தான் வெற்றிகரமான பந்துவீச்சாக மாறிவருகிறது என்பதை அறியலாம். அதனால் மற்ற பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் லெக்ஸ்பின்னர்கள் வெற்றியாளர்களாக இருந்து வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் கரண் சிங் என்ற லெக்ஸ்பின்னர் இருந்தால்க கூட, கூடுதலாக இம்ரான் தாஹீர் ஒருவர் இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள மார்க்கண்டே சிறப்பாக லெக் ஸ்பின் வீசுகிறார். சிறந்த லெக்ஸ்பின்னர் ஒருவர் இருந்தால், அணிக்குக் கூடுதல் பலமாகவே இருக்கும் என நான் கருதுகிறேன். புவனேஷ்வர் கடந்த 3ஆண்டுகளாகச் சிறப்பாக பந்துவீசிவருகிறார். இந்த 3 ஆண்டுகளில் பல விஷயங்களைக் கற்று, நன்கு தேறி இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் மட்டுமல்ல, கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களுக்கான கேமாகும். ஒருபோதும் பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக இருக்காது.
இவ்வாறு கபில்தேவ் தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்பில் உள்ள அஸ்வின், மும்பை லெக்ஸ்பின்னர்கள் மயங்க் மார்கண்டே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் லெக் ஸ்பின்னர் ராஷித் கான், முஜிபுர் ரஹ்மான், பெங்களூரு அணியில் இருக்கும் யுவேந்திர சாஹல் ஆகிய லெக்ஸ்பின்னர்கள் ஒவ்வொரு போட்டியிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் பந்துவீச்சாளர்கள் என்பதில் சந்தேகமில்லை.