கீழே விழுந்த ஒரு மனிதனை எட்டி உதைத்துக் கொண்டேயிருப்பது நியாயமா?: டேரன் சமி விளாசல்

கீழே விழுந்த மனிதனை எட்டி உதைப்பது எந்தவிதத்திலும் சரியல்ல, எனவே ஊடகங்களே தயவு செய்து வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று டேரன் சமி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோர் நியூலேண்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி சின்னாப்பின்னமானதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்களும் இவர்களை விட்டுவைக்காமல், சற்றும் இடைவிடாது இவர்களைத் தாக்கி எழுதி வந்தன.

ஊடகங்களின் நெருக்கடி ரசிகர்களிடையே ஒரு கருத்தொருமித்தலை உருவாக்க வார்னர், ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. ஸ்மித்தின் தந்தை அவரது கிட் பேக்கை தூக்கி கார் ஷெட்டில் எறிந்தார்.

தற்போது அவற்றையெல்லாம் மறந்து மன்னிப்புக் கேட்டு, குற்றவுணர்வுடன் வாழ்ந்து கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார் ஸ்டீவ் ஸ்மித்.

மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் டேரன் சமியும் ஸ்மித்தும் கனடா குளோபல் டி20 தொடரில் டொராண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஆடுகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க் பப் ஒன்றில் ஸ்மித் மது அருந்தியதாக வெளிவந்த புகைப்படத்தையொட்டி செய்தித்தாள்களில், “இழிவடைந்த ஸ்மித்தின் நியூயார்க் துயரகரக் காட்சி” என்று தலைப்பிட்டுள்ளன.

இதனை செய்தியாளர்கள் சந்திப்பின் போது குறிப்பிட்ட டேரன் சமி, “கீழே விழுந்த மனிதனை உதைத்துக் கொண்டேயிருந்தால் என்ன அர்த்தம்? இது தவறு.

கிறித்துவராகக் கூறுகிறேன் இங்கு பாபங்களுக்கு தண்டனை உண்டு. அதற்காக அனைத்துப் பாவங்களும் சரி என்று அர்த்தமல்ல. தவறு செய்து விட்டார், அதற்கான விலையையும் கொடுத்து விட்டார், தண்டிக்கப்பட்டு விட்டார், அப்படியிருக்கும் நிலையில் மன்னிப்பு ஒன்றே தீர்வு, மனிதாபிமானமாகும்.

அவர்கள் தவறிழைத்தனர், நீக்கப்பட்டனர், ஐபிஎல் கிரிக்கெட்டை இழந்தனர், ஆனால் வாழ்க்கை தொடர்ந்து நகர வேண்டும் தவறிலேயே நின்று கொண்டிருக்கக் கூடாது.

இது உங்களுக்காகத்தான் கூறுகிறேன் செய்தியாளர்களே, சமீபத்தில் நியூயார்க், ஸ்மித் பற்றி செய்தியைப்பார்த்துவிட்டுத்தான் கூறுகிறேன். நாங்கள் விளையாட்டு வீரர்கள் சூழ்நிலையில் தவறிழைப்பவர்கள்தாம் அதற்காக கீழே விழுந்த மனிதனை உதைத்துக் கொண்டேயிருப்பதா? இது மனிதாபிமானமற்ற செயல், தண்டனை அளிக்க உரிமை உண்டு அதேபோல் மன்னிக்கவும் உரிமை உண்டு, விட்டு விட்டு நகர்ந்து மேலே செல்ல வேண்டும்” என்று விளாசித்தள்ளினார்.

Editor:

This website uses cookies.