தனக்கும் குல்தீப் யாதவ்வுக்கும் பயனுள்ள பல ஆலோசனைகளை தோனி வழங்கி வருவதைக் குறிப்பிட்ட யஜுவேந்திர சாஹல், சரியாக வீசாத போதும் தோனி தன் சமநிலையை இழக்க மாட்டார், கோபப்படமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இது பற்றிய கேள்விக்கு சாஹல் கூறியதாவது:
நானும் குல்தீப் யாதவ்வும் பவுலிங் செய்யும் போது அவர் பிட்ச் எப்படி இருக்கிறது, பேட்ஸ்மென் எப்படி ஆடிக்கொண்டிருக்கிறார் என்று பல விஷயங்களை முன் கூட்டியே கூறிவிடுவார்.
இந்தப் பயனுள்ள தகவல்களினால் எடுத்த எடுப்பிலேயே நாங்கள் வீச வேண்டிய இடம், லெந்த் ஆகியவை பிடிபடுகிறது. இல்லையெனில் வீசி 3-4 ஒவர்கள் சென்ற பிறகுதான் எங்கு வீச வேண்டும், இந்த பேட்ஸ்மனுக்கு இங்கு வீச வேண்டும் என்று நாங்களே தெரிந்து கொள்ள நேரிடும்.
தோனி கேப்டனாக இருந்துள்ளார், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். விக்கெட் கீப்பராக பேட்ஸ்மென்களை மிகவும் நெருக்கமாக அவதானிக்க முடிகிறது. அவரும் பேட்ஸ்மென் என்பதால் அந்த பிட்சில் என்ன ஆட வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.
சில வேளைகளில் அவர் யோசனைக்கு மாறாக எனக்குத் திட்டங்கள் இருக்கும். நாங்கள் விவாதிப்போம், எங்கள் திட்டத்தை அவர் நிராகரிக்க மாட்டார். அதன் பிறகு வேறொரு திட்டம் தீட்டுவோம்.
சில வேளைகளில் அவர் ஆலோசனைகளை வழங்குவார், ஆனால் செயல்படுத்துவதில் தவறு நிகழும். அப்போது அவர் கோபப்படமாட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கிளாஸன் என் பந்துகளை அடித்து நொறுக்கிய போது தோனி என்னிடம், “இது உன்னுடைய தினமல்ல, கவலையை விடு, குறைந்தபட்சம் நீ உன் ஸ்பின் கூட்டாளி விக்கெட்டுகளை வீழ்த்துவதை உறுதி செய்யுமாறு வீசவும்” என்றார்.
ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் போட்டி என்றால் என்ன என்பதை இதுவரை அனுபவித்தது இல்லை. இப்பொது உற்சாகமாக இருக்கிறதே தவிர பதற்றம் இல்லை. இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். 1996 உலகக்கோப்பை போட்டி தனித்துவமானது” என்றார் சாஹல்.